லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு விளக்கம் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..

பெரும்பாலான லஞ்ச ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் காலதாமதம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையை சேர்ந்த முனீர் அகமது என்பவர் தன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 2017 ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ராமகிருஷ்ணன் மனுதாரர் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி  வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து உயர்நீதிமன்றத்தில்  2017 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்..

அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்து, 4 வாரத்தில் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது அதிர்ச்சியளிப்பதாக நீதிபதி தெரிவித்தார். பெரும்பாலான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மெத்தனமான அணுகுமுறையை பின்பற்றுவதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருப்பதாகவும் சாடினார்.

லஞ்ச ஒழிப்புத்துறையில் விசாரணை அதிகாரி துறை இயக்குனரிடம் அனுமதி பெற்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது இந்த பணிகளின் உடைய முக்கிய சாராம்சமாகும். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம்  உத்தரவிட்டும், இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விழிப்புடன் செயல்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். சமூக நலன் கருதியும், சாட்சிகள் பிறழாமல் இருக்கவும் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இப்படி பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் காரணமில்லாத தாமதத்தை அனுமதிக்க முடியாது.

எனவே லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் வருகின்ற 17ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் அல்லது காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான தாமதத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்கிற ஒரு உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்..