கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவினால் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிலச்சரிவின் காரணமாக அட்டமலா வனப்பகுதியில் பழங்குடியினர் குடும்பம் சிக்கி தவித்தது. இவர்களை வனத்துறையினர் சுமார் 8 மணி நேரமாக போராடி மீட்டு உள்ளனர். அவர்கள் 4 குழந்தைகள் உட்பட 6 பேரை மீட்டனர். அவர்கள் குழந்தைகளை தங்கள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு துண்டை வைத்து கட்டி இருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். அதோடு இத்தகைய இருண்ட காலங்களிலும் இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் தான் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்‌. மேலும் வனத்துறை அதிகாரிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.