மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம், பிஜாவர் பகுதியில் உள்ள ராஜா தலாப் என்ற குளத்தில் சுத்தம் செய்யும் பணியின் போது, நூற்றுக்கணக்கான அசல் வாக்காளர் அடையாள அட்டைகள் மிதந்து காணப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துப்புரவு பணியாளர்கள் குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் பையைக் கண்டு, அதைத் திறந்தபோது சுமார் 400-500 அட்டைகள் வெளியே வந்ததாகவும், அவை 15-ஆம் வார்ட்டைச் சேர்ந்தவர்களுக்கானவை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்பே காணாமல் போயிருக்கலாம் என்ற சந்தேகத்தில், உள்ளூர் நிர்வாகம் அனைத்து அட்டைகளையும் கையில் வைத்துக்கொண்டு முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. சமூக ஊடகங்களில் இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இச்சம்பவம் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முழுமையாக உறுதிப்படுத்துவதாக மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் தீப்தி பாண்டே விமர்சித்துள்ளார். சத்தர்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ககன் யாதவ், இந்த நூற்றுக்கணக்கான அட்டைகள் குளத்தில் எப்படி விழுந்தன? என்பதை தேர்தல் ஆணையம் உடனடியாக விளக்க வேண்டும்;

இல்லையெனில் தீவிர போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். பாஜக ஆளும் இந்த மாநிலத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம், தேர்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது, அதேசமயம் அதிகாரிகள் இது பராமரிப்பின்மை அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.