உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு, சென்னையைச் சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் என்பவர் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை பக்தியுடன் காணிக்கையாக வழங்கினார். கோவிலில் உள்ள தனது கட்டளை தீட்சிதர் ராமலிங்க தீட்சிதர் முன்னிலையில், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவசுந்தர தீட்சிதரிடம் இந்த விலை உயர்ந்த ஆபரணத்தை அவர் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று காலை நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது, மங்கல வாத்தியங்கள் முழங்க சிவகாமி அம்மனுக்கு இந்தத் தங்க காசு மாலை பொது தீட்சிதர்களால் அணிவிக்கப்பட்டது. அம்மன் தங்கக் காசு மாலையுடன் ஜொலிப்பதைக் கண்ட திரளான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
