உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் தீவிரமடைந்து வரும் சூழலில், பசிபிக் பெருங்கடலில் உருவாகும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வு தீவிரமடைந்து, வரவிருக்கும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 100% உறுதியாக நீடிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு (WMO) உலக நாடுகளுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

​கடந்த 50 ஆண்டுகால உலக வானிலை கண்காணிப்பு மற்றும் ஆய்வு வரலாற்றிலேயே, ஒரு காலநிலை மாற்றம் குறித்து இவ்வளவு துல்லியமாகவும் 100% உறுதியாகவும் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்று உலக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விடப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை மிகக் கடுமையாக உயர்ந்து வருவதால், இந்த முறை உருவாகியுள்ள அதிதீவிர எல் நினோ பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

​இந்த எல் நினோ நீட்டிப்பு காரணமாகப் புவியின் வானிலை அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும், இதன் காரணமாக உலக நாடுகளில் சில பகுதிகளில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கொடூரமான வறட்சியும், வேறு சில பகுதிகளில் கட்டுக்கடங்காத பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயம், குடிநீர் ஆதாரம் மற்றும் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், அனைத்து உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என உலக வானிலை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.