சிவகங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்த விவாகரத்து மேல்முறையீட்டு வழக்கில், மதுரை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தம்பதியரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன் செல்லும் இடமெல்லாம் மனைவியும் உடன் செல்ல வேண்டும் என்ற கீழ் நீதிமன்றத்தின் கருத்தை வன்மையாக மறுத்த நீதிபதிகள், இருவருக்கும் விவாகரத்து வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் (67) வயது நபர். இவருக்குத் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த மனுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து அவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் சுமதி அமர்வு விசாரித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்த வாதங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினர். “கணவன் வேலை தேடி சிவகங்கையை விட்டு மும்பைக்குச் சென்றுவிட்டான்; ஆனால், தன் மனைவியை அங்கு அழைத்துச் சென்று தனது பாலியல் விருப்பத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். கணவன் எங்கு சென்றாலும் மனைவியுடன் வசித்தால் மட்டுமே தவறான நடத்தைகள் நிகழாமல் தவிர்க்கப்படும்” என்று கீழ் நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்தைக் கடுமையாக விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், “கீழ் நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறையைத் தீவிர பெண்ணியவாதிகள் வேண்டுமானால் பாராட்டலாம்; ஆனால், இதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில், “மனைவியை எப்போதும் உடன் அழைத்துச் செல்வது எப்போதுமே சாத்தியமான ஒன்றாக இருக்காது. உதாரணமாக, கணவன் ஒரு ராணுவ வீரராக இருந்தால், ராணுவ முகாமில் குடும்பத்துடன் வசிப்பது இயலாத காரியம். ஒரு விளம்பரக் காட்சியில் வரும் நாயைப் போல, கணவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் மனைவியும் உடன் செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது” என்று திட்டவட்டமாகக் கூறினர்.
தற்போதைய மனுதாரருக்கு 67 வயதாகிறது என்பதையும், கணவன்-மனை இருவரும் கடந்த 16 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கிறார்கள் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. நீதிமன்றம் தரப்பில் இருவரிடமும் நடத்தப்பட்ட ஆலோசனையில், அந்தப் பெண் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கான எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.
இருவருக்கும் இடையிலான தாம்பத்திய உறவு எக்காலத்திலும் புதுப்பிக்க முடியாத அளவுக்கு முற்றிலுமாக முறிந்துவிட்டது என்பதை உறுதிசெய்த நீதிபதிகள், தம்பதியருக்கு விவாகரத்து வழங்கித் தீர்ப்பளித்தனர். மேலும், மனுதாரர் தனது மனைவிக்கு நிவாரணமாக ரூ. 7 லட்சத்தைச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
