பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் வைத்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வளங்கள் அலுவலர் சுகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, இணை இயக்குனர் முகமது அஸ்லம், மாவட்ட பதிவாளர் செல்வம், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் குமார், வேளாண்மை அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கூறியதாவது, முதல்வர் உத்தரவுப்படி பொங்கலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,094 ரேஷன் கடைகளில் 5,58,934 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. நாளை முதல் வருகிற எட்டாம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கும் பொருட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கு சென்று நேரடியாக டோக்கன் வழங்க இருக்கின்றனர்.

மேலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. அந்த பொங்கல் பரிசு தொகுப்பில்  தரமான அரிசி, ஆறு அடிக்கும் குறையாத கரும்பு கொள்முதல் செய்யப்படவுள்ளது.  இந்த பணிகளை கண்காணிப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.