டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி, தனது பாட்டியிடம் “ஐந்து நிமிடங்களில் வருகிறேன்” என்று கூறிவிட்டு மருந்துகள் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த ஒரு நபர் அந்தச் சிறுமியைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார்.
மேலும் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட 24 வயது இளைஞரும், சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதனால் மாணவியைக் தாக்கிய பிறகு தனது வீட்டிற்குச் சென்ற அந்த இளைஞர், சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் சிலிண்டரை வெடிக்கச் செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆரம்பத்தில் இரு குடும்பத்தினரும் ஒருவரைக்கொருவர் தெரியாது என்று கூறினாலும், போலீஸ் விசாரணையில் மாணவிக்கும் அந்த இளைஞருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. டெல்லி போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
