பெங்களூரு நகரில் உள்ள புகழ்பெற்ற மற்றும் ஆடம்பரமான 5 ஸ்டார் மற்றும் 3 ஸ்டார் ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மாநிலத்தின் சுகாதார அமைச்சரின் நேரடி மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்ட 30 தனிப்படை குழுவினர், முன்னணி ஹோட்டல்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தனர்.
#WATCH | Karnataka | Food Safety and Drug Administration Department, Food Safety Wing with 30 teams of Food Safety Officers conducted a special drive on 3-star and 5-star hotels in Bengaluru to verify compliance with the provisions of the Food Safety and Standards Act, 2006 and… pic.twitter.com/xgm5sT7cV0
— ANI (@ANI) August 8, 2026
இந்த அதிரடி சோதனையின் போது, சொகுசு ஹோட்டல்களின் ஆடம்பரமான வெளித்தோற்றத்திற்குப் பின்னால் கடுமையான சுகாதாரக் கேடுகள் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில முன்னணி ஹோட்டல்களில் பற்கள் படும் அளவுக்கு அழுகிய மற்றும் பூஞ்சை பிடித்த 207 கிலோ காய்கறிகள், தரமற்ற மாமிசம், 32 லிட்டர் காலாவதியான பால் மற்றும் பயன்பாட்டிற்குத் தகுதியற்ற 250 கிலோவிற்கும் அதிகமான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சைவ மற்றும் அசைவ உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்குத் தனித்தனி பாதுகாப்பு முறைகளைக் கூடப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு மாறாக முறையற்ற லேபிளிங் செய்வது, காலாவதியான பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் சமையலறைகளில் உரிய தூய்மையைப் பராமரிக்காதது போன்ற கடுமையான விதிமீறல்களுக்காக இந்த ஹோட்டல்களுக்கு எதிராகப் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. பெருநகரங்களில் உள்ள பெரிய மற்றும் விலை உயர்ந்த ஹோட்டல்களும் சுகாதார விதிகளைச் சரியாகப் பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்வதே இந்தச் சோதனையின் முக்கிய நோக்கம் என்றும், இதன் மூலம் சிறிய வணிக நிறுவனங்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
