தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 14-ஆம் தேதி திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தொடர்பாக சிபிஐயில் விரைவில் புகார் கொடுக்க இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் விவரம் முற்றிலும் ஆதாரமற்றவை என ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். திமுகவினருக்கு சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ. 3474.18 கோடி என்றும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பு ரூ. 34,184.71 கோடி என்று அண்ணாமலை கூறியுள்ளது முற்றிலும் பொய்யான தகவல்.

திமுக கட்சியின் நிர்வாகியாக இருக்கும் ஒருவரின் சொத்துக்கள் திமுகவின் சொத்துக்களாக மாறிவிட முடியாது. எனவே அண்ணாமலையின் பொய்யான தகவல்களுக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டு களுக்காக திமுகவினருக்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த 500 கோடி இழப்பீடு தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் செலுத்தப்படும். இதை 48 மணி நேரத்தில் அண்ணாமலை செய்யாவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என ஆர்.எஸ் பாரதி நோட்டீஸில் எச்சரித்துள்ளார்.