கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடல் கிராமத்தில் வரதராஜன்- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மகேஸ்வரிக்கும், ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் செந்துறையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வரதராஜனின் உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில் நேற்று அதிகாலை திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர்.

அந்த பேருந்தை முரளி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். திருமணம் முடிந்தவுடன் மீண்டும் அவர்கள் அதே பேருந்தில் கார்குடல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தேவனூர் கல்வெட்டு என்ற கிராமத்தின் வளைவில் அதிவேகமாக திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் முரளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் ஆசை தம்பி, இனியா, கர்ப்பிணியான கனிமொழி, சாந்தி உட்பட 45 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய முரளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.