மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் திவாரி. இவர் பகுதிநேர ஆசிரியராகவும், விவசாயியாகவும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 45 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகாததால்  மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

கடந்த மாதம் இந்திரகுமார் ரிவன்ஜா கிராமத்தில் நடைபெற்ற பிரபலமான குரு அனிருத்தாச்சாரியா மகாராஜ் நடத்திய ஆன்மீக சொற்பொழிவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது சொற்பொழிவில் பேசிய இந்திரகுமார் தனக்கு 45 வயது ஆகியும் இதுவரை மணப்பெண் கிடைக்காமல் திருமணம் ஆகவில்லை.

இதனால் எனக்கு அதிக மன உளைச்சல் ஏற்பட்டு விரக்தி அடைந்துள்ளதாக கூறினார். இதனைக் கேட்ட அங்கிருந்தவர்கள் இந்திர குமாருக்கு ஆறுதல் கூறாமல் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு இந்திரகுமார் கடந்த 25 நாட்களாக காணாமல் போனதால் அவரது கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திரகுமார் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது இந்திரகுமார் கலந்து கொண்ட ஆன்மீக சொற்பொழிவில் அவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.‌

அது வெளியாகிய சிறிது நேரத்திலேயே அடையாளம் தெரியாத குழு ஒன்று இந்திரகுமாரை தொடர்பு கொண்டுள்ளது. அவர்கள் இந்திரகுமாரிடம் நாங்கள் உங்களுக்கு குஷி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறி கோரக்பூருக்கு அழைத்துச் சென்றனர்.

பின்பு திருமண சடங்குகளுக்கான நகைகள் மற்றும் பணத்தை கொண்டு வருமாறு இந்திரகுமாரிடம் கேட்டுள்ளனர். அதனை எடுப்பதற்காக இந்திரகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 2ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியேறிய அவர்  தான் ஜூன் 6-ம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்து விடுவேன் என கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் அதன் பிறகு இந்திர குமாரிடம் இருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லை. எனவே அவரது குடும்பத்தினர் ஜூன் 8-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்திர குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.