
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக வெற்றியை உறுதி செய்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அவர் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வந்த நிலையில் அந்த தொகுதியில் அவருடைய சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி முதல் முறையாக களமிறங்கினார். பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட நிலையில் வயநாடு தொகுதியில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார். அதன்படி பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ராகுல் காந்தியை விட அதிகமாக வாக்குகள் பெற்று பிரியங்கா காந்தி வென்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சத்யன் மோகேரி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் டெபாசிட் இழந்தார். மேலும் பிரியங்கா காந்தி தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு அந்த மக்களுக்காக நாடாளுமன்றத்தில் என்னுடைய குரல் ஒலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.