ஜூலை 15 அன்று திட்டமிடப்பட்டுள்ள கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவின் மாபெரும் ‘நீண்ட பேரணி’க்கு முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலைமை மோசமடைவதைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் மத்தியப் படைகளைக் குவிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சிஎன்என்-நியூஸ்18 ஊடகத்திற்கு கிடைத்த இரகசியமான அரசாங்கத்தின் ஆவணப்படி, ‘ஆசாத் ஜம்மு காஷ்மீர்’ உள்துறை அமைச்சகம், 4,000 ஃபெடரல் கான்ஸ்டாபுலரி வீரர்களையும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸின் ஏழு பிரிவுகளையும் உடனடியாகப் பணியில் அமர்த்தக் கோரி இஸ்லாமாபாத்திற்கு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த பல மாதங்களாக அதீத மின்சாரக் கட்டணங்கள், மாவு மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக மக்கள் போராடும் நிலையில், பாதுகாப்புப் படையினரில் 50 சதவீதம் பேர் ஆயுதங்களுடனும், 50 சதவீதம் பேர் கலவரத் தடுப்பு உபகரணங்களுடனும் தயார் நிலையில் இருப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் நியாயமான உரிமைகளை ஒடுக்குவதற்காகப் பாகிஸ்தான் அரசுமீண்டும் ஒரு பெரிய அளவிலான வன்முறையைத் தொடங்கக்கூடும் என்று குடிமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
