சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கம் அரசு துறைகள் மற்றும் அரசுடன் இணைந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புகளுக்கு வாடகை விடப்பட்டு வருகிறது. அதன்படி சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் எனும் தனியார் அமைப்பு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக அண்ணா  பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருந்தது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 26 -ஆம் தேதி விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்ற விருது விழாவில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், நடன இயக்குனர் சாந்தி, நடிகர் வடிவேலு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் உட்பட 40 பேருக்கு கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டது.

மற்றொருபுறம் தனியார் நிறுவனம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பாக இணையத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக விசாரிக்கப்பட்ட போது சம்பந்தப்பட்ட தனியார் அமைப்பு தவறான தகவல்களை தெரிவித்து நிகழ்ச்சியை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்த வேல்ராஜ் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, திரை பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய தனியார் அமைப்புகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கடந்த நவம்பர் மாதம் இந்த தனியார் அமைப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கத்தை வாடகைக்கு கேட்டு கடிதம் வழங்கியது.

மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகத்தின் பெயரில் பரிந்துரை கடிதம் இருந்தது. அதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தவிர அவர்கள் முதலில் விருது வழங்கும் நிகழ்ச்சி என தான் குறிப்பிட்டுள்ளனர். விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நீதிபதி வள்ளிநாயகம் பெயர்களை இந்த தனியார் அமைப்பு தவறாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தனியார் அமைப்பின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது. தனியார் அமைப்பு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நோட்டீஸ் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் ஒரு புனிதமான இடமாகும். இங்கு தவறான செயல் நடந்திருப்பதை நினைத்து வருத்தப்படுகிறோம்.

இதில் பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனரா? என விசாரணை நடத்தப்படும். மேலும் நீதிபதி கடிதமும் போலியானதாக இருக்கலாம் என தெரிகிறது. இது மட்டுமல்லாமல் மத்திய அரசின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி இருக்கின்றனர். பொதுவாக பல்கலைக்கழகங்கள் மட்டுமே கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க முடியும். அதை தனியார் அமைப்புகள் தருவதற்கு அதிகாரம் கிடையாது. இந்த தனியார் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கௌரவ பட்டம் பெற்ற 40 பேரும் ஏமாற்றப்பட்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து விவேகானந்தர் அரங்கத்தை வாடகைக்கு விடும் விதிமுறைகள் கடுமையாக முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.