சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி(30) கரட்டுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கணபதிக்கும் ஸ்ரீதேவி(25) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 4 வயது உடைய சித்தேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு அடிக்கடி உடல் நலகுறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக தந்தை வீட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று உடல் நலம் சரியானதும் கணபதி ஸ்ரீதேவியை வீட்டிற்கு அழைத்து செல்வார்.

இந்நிலையில் கணபதி தனது மாமனாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நங்கவள்ளியில் இருக்கும் கோவிலுக்கு செல்கிறேன். எனவே வீட்டிற்கு வந்து ஸ்ரீதேவியையும், மகனையும் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து ஸ்ரீதேவியின் தந்தை மாரியப்பன் மருமகன் வீட்டிற்கு சென்ற போது மகளும், பேரக்குழந்தையும் வீட்டில் இல்லை. இதனால் பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது தோட்டத்து கிணற்றுக்கு பக்கம் ஸ்ரீதேவி குழந்தையுடன் சென்றது தெரியவந்தது.

உடனே அங்கு சென்று பார்த்த போது ஸ்ரீதேவி கிணற்றில் சுடலமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீதேவி மற்றும் சித்தேஸ்வரன் ஆகியோரின் உடல்களை மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தனது மகனுடன் ஸ்ரீதேவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.