தமிழக மின்சார வாரியத்தில் (TANGEDCO) கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், சுமார் 45 ஆயிரம் மின்மாற்றிகள் (Transformers) கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.397 கோடி ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அ.தி.மு.க தரப்பில் இ.சரவணன் மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இதற்கும் தொடர்பில்லை என அவரது தரப்பு வாதாடிய நிலையில், நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை வசம் உள்ள அனைத்து ஆவணங்களையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழக அரசு மற்றும் மின்சார வாரியம் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
