திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. 39 தொகுதிகளில் தொடங்கி, இப்போது 27 தொகுதிகளுக்காக காங்கிரஸ் மல்லுக்கட்டி வரும் நிலையில், திமுகவோ 25-க்கு மேல் ஒரு இன்ச் கூட இறங்கி வர முடியாது என கறாராகக் கூறிவிட்டது. இடையில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையால் விரிசல் விழுந்து, கூட்டணி உடையுமளவிற்குச் சென்ற சூழலில், சோனியா காந்தியின் தலையீட்டால் தற்போது பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வந்துள்ளது. 27 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற காங்கிரஸின் பிடிவாதத்திற்கு திமுக அடிபணியுமா அல்லது 25-உடன் கணக்கை முடிக்குமா என்பதே தற்போதைய ஹாட் டாபிக்.

​அதிமுக பக்கம் காங்கிரஸ் செல்லக்கூடும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கே.சி.வேணுகோபால் சென்னை வந்து ஸ்டாலினைச் சந்தித்ததும், கனிமொழி – கிரிஷ் சோடங்கர் இடையிலான ரகசிய ஆலோசனைகளும் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளன. ஆட்சியில் பங்கு என்ற பேச்சை காங்கிரஸ் கைவிட்டாலும், கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற செல்வப்பெருந்தகை தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். ராஜ்யசபா சீட்டுக்கு திமுக க்ரீன் சிக்னல் காட்டியுள்ள நிலையில், இறுதித் தொகுதி எண்ணிக்கை 25-ஆ அல்லது 27-ஆ என்பது இன்னும் ஒரு சில தினங்களில் தெரிந்துவிடும்.