மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், லண்டனில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் கேப்டன்களும் கலந்துகொண்ட ‘கேப்டன்ஸ் கார்னிவல்’ (Captains’ Carnival) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்திய மகளிர் அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த 37 வயதான தற்போதைய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு, இதுவே கடைசி உலகக்கோப்பைத் தொடராக இருக்கும் என்றும், அவர் விரைவில் ஓய்வு பெறப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு இந்தச் சந்திப்பில் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
View this post on Instagram
செய்தியாளர் ஒருவர், “இது உங்களின் கடைசி டி20 உலகக்கோப்பையா?” என்று கேள்வி எழுப்ப, அதற்கு ஹர்மன்பிரீத் கவுர் புன்னகையுடன் “ஏன்? நான் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” எனத் திருப்பிக் கேட்க, அந்தச் செய்தியாளர் “இல்லை” எனப் பதிலளித்தார்.
உடனே ஹர்மன்பிரீத், “பிறகு ஏன் இந்தக் கேள்வி?” எனத் தனது பாணியில் சடாரென்று பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், முந்தைய காலங்களில் தனது ஓய்வு குறித்த கேள்விகளுக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இதேபோல் சுவாரசியமாகப் பதிலளிப்பதைக் குறிப்பிட்டு, ரசிகர்கள் இதனை ‘தோனி ஸ்டைல் பதிலடி’ எனப் பாராட்டி வருகின்றனர்.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஏ பிரிவில் (Group A) இடம்பிடித்துள்ள இந்திய மகளிர் அணி, தனது முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டு ஒரு பிளாக்பஸ்டர் ஆட்டத்துடன் தனது உலகக்கோப்பை பயணத்தைத் தொடங்குகிறது. லீக் சுற்றில் இந்தியா மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய வலுவான அணிகளின் சவால்களை எதிர்கொள்ள கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் தீவிரமாகத் தயாராகி வருகிறது.
