சஞ்சய் மாவட்டம் கும்பகோணம் வட்டம் மாங்குடியில் வசிப்பவர் முத்தையன் மகன் சந்திரசேகரன். பரம்பரை விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் மாங்குடி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்துவிடம் கடந்த 1988 ஆம் ஆண்டு 21 சென்ட் நிலத்தை கிரயம் வாங்கியுள்ளார். அந்த நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்ய சந்திரசேகரன் பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் பட்டா மாற்றம் நடைபெறவில்லை. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மக்கள் குறைதீர் திட்டமாக மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த வட்டார தாசில்தார் தலைமையில் முகாமிடத்தில் மக்கள் குறைகளை கேட்டு தீர்வு காணும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த திட்டத்தின்படி கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வளையப்பேட்டை வருவாய் கிராமத்தை சேர்ந்த மாங்குடி கிராமத்தில் உள்ள சமூக கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் சந்திரசேகரன் பட்டா மாற்றம் கோரி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பிப்ரவரி இரண்டாம் தேதி சந்திரசேகரனுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய சேவை மூலமாக வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு மேல் முடியாத பட்டா மாற்றத்தை மூன்றே நாளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து விவசாய சந்திரசேகரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.