
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிஃப், பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் எந்தவொரு பயங்கரவாதிகளும் இல்லை, பயங்கரவாத குழுக்களும் செயல்படவில்லை” என உறுதியுடன் கூறியுள்ளார். இது, இந்திய அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
லஷ்கர் இ தொய்பா சார்பான அமைப்பே பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது, இது இந்தியா தெரிவித்துள்ளதைப்போல பாகிஸ்தானிலிருந்தே செயல்படும் அமைப்பு எனவும், பாக் இராணுவம் மற்றும் “டிிப் ஸ்டேட்” ஆதரவுடன் இயங்கும் எனவும் கூறப்படுகிறது. பிபிசியின் பாகிஸ்தான் செய்தியாளர் அசாதே மொஷிரி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அஸிஃப், “பயங்கரவாதிகள் இருக்கிறார்களா?” என்ற கேள்விக்கு “இல்லை” என பதிலளித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா கடந்த மூன்று தசாப்தங்களாக பாகிஸ்தானை பயன்படுத்தி முஜாஹிதீன் அமைப்புகளை உருவாக்கியது என்றும், பின் அதே அமைப்புகளை “தொலைத்துப் போனது” என்றும் கூறிய அவர், “நாங்கள் அவற்றின் விளைவுகளை இப்போது அனுபவிக்கின்றோம், ஆனால் அமெரிக்கா சுத்தம் செய்யப்பட்டது… நாங்கள் இன்னும் மாசடைந்தவர்களாகவே பார்க்கப்படுகிறோம்” என வருத்தப்பட்டார்.
பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த அமெரிக்க குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர், “புல்வாமா, உரி போன்ற தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததாகச் சொல்வது ஏற்க முடியாதது” எனவும் தெரிவித்தார். ஆனால், கடந்த மாதம் ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவுக்காக இப்படி தவறான வேலைகளை செய்துவந்தோம்” என அவர் வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானை, பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடம் தரும் நாடாகவும், ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்களை திட்டமிடும் நாடாகவும் குற்றம்சாட்டி வருகிறது. புல்வாமா (2019), உரி (2016), பாராளுமன்றம் மீது தாக்குதல் (2001), மும்பை தாக்குதல் (26/11) உள்ளிட்ட அனைத்து முக்கிய தாக்குதல்களுக்கும் பாக் ஆதாரங்கள் இருப்பதை இந்தியா சுட்டிக்காட்டி வந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிந்தைய அரசு அறிவிப்பிலும், இந்தியா பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்காக “அரசு மரியாதையுடன் நடத்தப்பட்ட இறுதி ஊர்வலங்கள்” குறித்து ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, பாகிஸ்தானின் மறுப்பு அறிக்கைகள் எந்த அடிப்படையும் இல்லாதவை என்பது தெளிவாகி வருகிறது.