ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா தனது இலக்கை மிக நெருங்கிவிட்டதாகவும், விரைவில் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பரிசீலித்து வருவதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளிலும் அமெரிக்கா அதிரடி தளர்வுகளை அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப்,

“மத்திய கிழக்கில் அமெரிக்கா மேற்கொண்ட மாபெரும் நடவடிக்கைகளைத் தற்போது குறைத்துக் கொள்வது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். இந்த ராணுவ நடவடிக்கையின் நோக்கங்களை அடைவதற்கான நிலையை அமெரிக்கா மிகவும் நெருங்கிவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி குறித்துப் பேசிய அவர், அந்தப் பாதையைப் பயன்படுத்தும் மற்ற நாடுகள் தங்கள் தேவைக்கேற்ப அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்கா அதைப் பயன்படுத்தாததால் இனி அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் இது குறித்துக் கூறுகையில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என அதிபரும் பென்டகனும் கணித்திருந்ததாகத் தெரிவித்தார். தற்போது 3-வது வாரம் தொடங்கவுள்ள நிலையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான அச்சுறுத்தும் திறன் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விநியோகத்தில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனைச் சீராக்க அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி மார்ச் 20-ஆம் தேதிக்கு முன்னர் கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இந்தத் தளர்வு ஏப்ரல் 19-ஆம் தேதி வரை நீடிக்கும்.

இதன் மூலம் சுமார் 140 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உடனடியாக உலகச் சந்தைக்கு வரும். இது சர்வதேச அளவில் நிலவும் எரிபொருள் அழுத்தத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த சலுகையை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. அதாவது சர்வதேச சந்தைக்கு வழங்க தங்களிடம் கூடுதல் கச்சா எண்ணெய் இருப்பு எதுவும் இல்லை என ஈரான் கைவிரித்து விட்டது. மேலும் இதன் காரணமாக தற்போது போர் முடிவது குறித்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.