மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டு தன் 30% ஊழியர்களுக்கு சென்ற 2022 ஜனவரி- டிசம்பர் காலத்துக்கான ஊதிய உயர்வை அளிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதுகுறித்து ஊழியர்களுக்கு மின் அஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பிளிப்கார்டில் பணிப்புரியும் சுமார் 4,500 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

தற்போதைய நிலையற்ற பொருளாதார சூழலில் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த ஆக்கத்தோடு பணிசெய்ய வைப்பதை நிறுவன மேலாண்மை கவனத்தில் கொண்டுள்ளது என ஊழியர்களுக்கு, நிறுவன முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் அனுப்பிய மின் அஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் மார்ச் மாதத்தில் வழங்கப்படும் ஊதிய உயர்வு நடப்பு ஆண்டு 30% ஊழியர்களுக்கு வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பல்வேறு பொருளாதார காரணிகளால் பிளிப்கார்டு நிறுவனம் தன் பணிப்பலத்தை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.