இந்தியாவில் வசிக்க சிறந்த நகரம் என்ற கேள்விக்கு ஒரே பதில் இல்லை என புதிய பகுப்பாய்வு தெரிவிக்கிறது. ஒருவரின் வயது, வேலை, குடும்பச் சூழல், வருமானம் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த நகரத்தின் தேர்வும் மாறுகிறது. குறிப்பாக 20 முதல் 30 வயது வரையிலான இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு, வருமான வளர்ச்சி மற்றும் சேமிப்பு வாய்ப்புகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இந்த அடிப்படையில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகியவை ஆரம்பகட்ட தொழில் வாழ்க்கைக்கு ஏற்ற நகரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
30 முதல் 40 வயது வரையிலான காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கை தொடங்குவதால் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான வசதிகள் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற அம்சங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த வயதினருக்கு அகமதாபாத், சென்னை மற்றும் புணே ஆகிய நகரங்கள் சிறந்த தேர்வுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக வருமானத்துடன் ஒப்பிடும்போது செலவுகள், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலை காணப்படுவதாக அந்தப் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இதனால் தொழில் வளர்ச்சியுடன் குடும்ப வாழ்க்கையையும் சமநிலைப்படுத்த விரும்புவோருக்கு இந்த நகரங்கள் ஏற்றதாகக் கருதப்படுகின்றன.
35 முதல் 50 வயது வரையிலான காலகட்டத்தில் குழந்தைகளின் கல்வி, குடும்பப் பாதுகாப்பு, சுகாதார வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை முக்கியமானதாக மாறுகின்றன. இந்த நிலையில் அகமதாபாத், சூரத், இந்தூர், கோயம்புத்தூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் சிறந்த நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. அதேபோல் அதிக வருமானம் கிடைக்கும் தொழில் வாழ்க்கையின் முக்கிய ஆண்டுகளில் ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புணே ஆகிய நகரங்கள் முன்னிலையில் உள்ளன. வீட்டு விலை மற்றும் வருமானத்துக்கு இடையிலான விகிதமும் இந்தத் தேர்வில் முக்கிய காரணியாகக் கருதப்பட்டுள்ளது.
48 முதல் 60 வயது வரை ஓய்வை நெருங்குபவர்களுக்கு வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பிரிவில் புணே, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகியவை சிறந்த நகரங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோயம்புத்தூர், ஜெய்ப்பூர் மற்றும் சூரத் ஆகியவை, முழுமையான ஓய்வுக்குப் பிறகு சூரத், இந்தூர், கோயம்புத்தூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகியவை ஏற்ற நகரங்களாகக் கூறப்பட்டுள்ளன. எனவே, வயது மற்றும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப தேவைகள் மாறுவதால், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே “சிறந்த நகரம்” என்று எதையும் கூற முடியாது என இந்தப் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
