தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குருபரள்ளி பஞ்சாயத்தில் உள்ள பாலசமுத்திரம் கிராமப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் வீடுகள் மற்றும் விவசாய கிணறுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக ட்ரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அந்த டிரான்ஸ்பார்மர் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த நிலத்தின் சொந்தக்காரர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மின்சாரத்தை துண்டித்ததாக தெரிகிறது. இதனால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மூன்று நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. இதனால் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிரமப்படுகின்றனர். எனவே விரைவில் மின்சாரம் வழங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.