உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு இளைஞர் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 25 இளம்பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றிப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவைச் சேர்ந்த அந்த இளைஞர், தன்னை ஒரு பெரிய ஐடி நிறுவனத்தின் மேலாளர் என்று பொய் சொல்லி, சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் பழகியுள்ளார். தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் காட்டி பெண்களை நம்பவைத்து, அவர்களைத் தனி இடங்களுக்கு வரவழைத்துப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விவகாரம் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, போதையில் தான் செய்த ‘சாதனைகளை’ பெருமையாகப் பேசியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்களே இது குறித்துப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் அதிரடியாகச் செயல்பட்ட போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவர் ஒரு ஐடி ஊழியரே கிடையாது என்பதும், பல பெண்களின் வாழ்க்கையோடு விளையாடியிருப்பதும் உறுதியானது.

பாதிக்கப்பட்ட பெண்களில் பலருக்கு அந்த இளைஞர் ஏற்கனவே திருமணமாகிப் போனது கூடத் தெரியவில்லை. போதையில் உளறியதால் சிக்கிய இந்த ‘மன்மத’ இளைஞரின் பின்னணியில் இன்னும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

காதலிப்பதாகக் கூறி பெண்களை வலையில் வீழ்த்தும் இத்தகைய நபர்களிடம் இளம்பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.