பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள லலித் நாராயண் திரூத் கல்லூரியில், இளங்கலைத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேர்வு மையத்திற்குள்ளேயே புகுந்து மாணவி ஒருவருக்கு இளைஞர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூர்வி சம்பாரண் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் குமார் என்ற இளைஞர் மீது பாதிக்கப்பட்ட மாணவி பரபரப்பு புகாரை அளித்துள்ளார். அதில், “கடந்த 3 ஆண்டுகளாக ரவிசங்கர் என்னைத் துரத்தித் துரத்தி காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்தார். திருமணத்திற்கு மறுத்ததால், எனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். எனது செல்போனை ஹேக் செய்ததோடு மட்டுமல்லாமல், எனக்கு நிச்சயிக்கப்பட்ட இரண்டு திருமணங்களையும் அந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு எனது புகைப்படங்களை அனுப்பி நிறுத்திவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
தேர்வு நடந்து கொண்டிருந்தபோது மையத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரவிசங்கர், மாணவியின் கையைப் பிடித்து இழுத்து, வெளியே வருமாறு மிரட்டியுள்ளார். மாணவி கூச்சலிடவே, அங்கிருந்த ஆசிரியர்களும் ஊழியர்களும் அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட ரவிசங்கர் கூறுகையில், “எங்களுக்குள் 3 ஆண்டுகளாக காதல் இருந்தது. மாணவிதான் என்னைக் கல்லூரிக்கு வருமாறு அழைத்தார். அவர் வேறொரு இளைஞருடன் பேசுவதைக் கண்டித்ததால், ஆத்திரத்தில் ஆட்களை வைத்து என்னை அடித்துவிட்டு, இப்போது பொய் புகார் கூறுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல் ஆய்வாளர் சந்திர பூஷன் பிரசாத் சிங் கூறுகையில், “மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்,” எனத் தெரிவித்தார். தேர்வு மையத்திலேயே மாணவிக்கு நேர்ந்த இந்த அச்சுறுத்தல், கல்லூரி வளாகங்களின் பாதுகாப்பு குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
