மத்தியப் பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில், தந்தை ஒருவரே தனது சிறு வயது மகனுக்கு மது ஊற்றிக் கொடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகரில் உள்ள அரசு மதுக்கடை ஒன்றின் முன்பாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது சிறு வயது மகனை மதுக்கடைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவர் மதுவை வாங்கி, விவரம் அறியாத அந்தப் பச்சிளம் சிறுவனுக்கு வலுக்கட்டாயமாகப் புகட்டியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
#WATCH | MP: Man Caught Forcing Son To Drink Alcohol In #Morena #MadhyaPradesh #MPNews pic.twitter.com/Jmce8kwcK7
— Free Press Madhya Pradesh (@FreePressMP) May 7, 2026
தந்தையின் இந்த அநாகரீகச் செயலைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், உடனடியாகக் தலையிட்டு சிறுவனைத் தந்தையிடமிருந்து மீட்டனர். தொடர்ந்து, அந்த நபரை அங்கேயே பிடித்து சரமாரியாகத் தர்ம அடி கொடுத்தனர். அங்கிருந்தவர்கள் இந்த முழுச் சம்பவத்தையும் தங்கள் செல்போன்களில் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
“பெற்ற பிள்ளையை நல்வழியில் நடத்த வேண்டிய தந்தையே, இப்படிச் சீரழிப்பது சமூகத்திற்குக் கேடானது” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த நபரைக் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், சிறுவனுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வப் புகார் ஏதும் பதிவாகவில்லை என்றாலும், வைரல் வீடியோவின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. பெற்றோரால் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் இத்தகைய கொடுமைகள், சமூகத்தின் தார்மீகப் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
