அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வசித்து வருபவர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்மன்பிரீத்-குல்பிர் தம்பதி. இவர்கள் செஸ்டர்பீல்ட் நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வந்தனர். 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் ஹர்மன்பிரீத் தனது உறவுக்கார இளைஞர் ஒருவரை சூப்பர் மார்க்கெட்டில் பணியமர்த்தினார். கேசியர் என்று கூறி இளைஞரை அழைத்து வந்துவிட்டு சூப்பர் மார்க்கெட்டின் அனைத்து வேலைகளையும் அவரிடமே பார்க்க சொல்லியுள்ளார். அதோடு அங்கேயே அவரை தங்க வைத்து அதிகப்படியான வேலையை கொடுத்த தம்பதி அந்த இளைஞருக்கு போதிய உணவு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு வேலையை செய்ய முடியாது என்று  அந்த இளைஞர் கூறினால் அவரை இந்த தம்பதி அடித்து துன்புறுத்தி உள்ளனர். சுமார் மூன்று வருடங்கள் இந்த தம்பதியிடம் சித்திரவதை அனுபவித்த இளைஞர் சமீபத்தில் அவர்களிடம் இருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து  தம்பதி மீது வழக்கு பதிவு செய்து  கைது செய்த போலீசார் அவர்கள் மீது ஏழு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 20 வருடங்கள் வரை சிறை தண்டனையும் 2 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.