ஐதராபாத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் நள்ளிரவில் சாதாரண உடையில் சாலையில் தனியாக நின்று நடத்திய அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெண்கள் வெளியே செல்வது பாதுகாப்பானதா என்பதை ஆய்வு செய்ய அவர் மேற்கொண்ட இந்த முயற்சியின் போது, அந்த வழியாக வந்த காமுகர்கள் பலரும் அவரை சாதாரண பெண் என நினைத்து அநாகரீகமான முறையில் வம்பிழுத்துள்ளனர்.
வெறும் 3 மணி நேர சோதனையிலேயே, அந்தப் பெண் அதிகாரியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற 40 நபர்களை மறைந்திருந்த காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்து தட்டித் தூக்கினர். பெண்களின் பாதுகாப்பைச் சோதனை செய்ய காவல்துறை அதிகாரியே களத்தில் இறங்கி, ஒரே இரவில் 40 காமுகர்களைக் கைது செய்த இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருவதோடு, பெண்களுக்கு எதிராகத் தவறாக நடப்பவர்களுக்கு ஒரு பலமான எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.
