அகமதாபாத்தில் தீபாவளி கொண்டாட்டம் ஒரு சோகமான நிகழ்வாக மாறியது. சபர்மதி பகுதியில் ஹீனா புரோஹித் என்ற 16 வயது மாணவி, பட்டாசு விளையாட்டால் தனது உயிரை இழந்தார். அக்டோபர் 21 இரவு, மூன்று இளைஞர்கள் (ஒரு 19 வயது இளைஞர் மற்றும் இரண்டு மைனர்கள்) இரும்புக் குழாயில் பட்டாசுகளை வைத்து வெடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கற்களுக்கு இடையில் வைக்கப்பட்டிருந்த குழாய் கவிழ்ந்து, வெடித்த பட்டாசு அதிவேகமாகப் பறந்து அருகில் நின்றிருந்த ஹீனாவின் தலையில் பலமாகத் தாக்கியது. படுகாயமடைந்த ஹீனா, மறுநாள் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஹீனாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த இளைஞர்களின் கவனக்குறைவான செயலே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று உறுதி செய்யப்பட்டது. சபர்மதி காவல்துறையினர் உடனடியாக மூன்று இளைஞர்கள் மீதும் பாரதிய ந்யாய சன்ஹிதாவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். பண்டிகைக் காலங்களில் ஆபத்தான விளையாட்டுகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் உயிரிழந்த ஹீனாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
