சென்னை பெருநகர குடிநீர் வளங்கள் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள குடிநீர் வாரிய சிந்தாரிப்பேட்டை தலைமை அலுவலகத்தில் புதுப்பித்தல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் 29-ஆம் தேதி இரவு 11 மணி வரை தரவு மையத்தில் புதிய மின்சார கேபிள் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இணையதள வழியாக பெறப்படும் சேவைகளாக குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி செலுத்துதல், கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் பெறப்படும் குடிநீர், பொதுமக்கள் குறைதீர்க்கும் மையம், புதிய குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு விண்ணப்பித்தல் மற்றும் எம்.சி.ஆர் நகரில் தற்போது இயங்கும் தலைமை அலுவலக இணையதள இணைப்பு போன்ற அனைத்து சேவைகளும் செயல்படாது.

மேலும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு தினசரி லாரி மூலமாக தண்ணீர் வழங்கப்படும். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையும் இல்லாமல் வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். அதேபோல் வருகிற 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் புதிய மின்சார கேபிள் மாற்றியமைக்கும் பணி முடிக்கப்பட்டு இணையதள சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.