16வது IPL கிரிக்கெட் போட்டியானது இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடரில் இன்னும் எந்தவொரு அணியும் பிளே-ஆப் சுற்றுக்கு அடியெடுத்து வைக்கவில்லை. இந்நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியானது, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் மும்பை அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.

மும்பை அணியின் கேப்டனான ரோகித்சர்மா 29 ரன்கள் அடித்து அவுட்டானார். 3-வதாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 20வது ஓவரின் கடைசி பந்தில் சதமடித்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து குவித்தது. அதனைதொடர்ந்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் குஜராத் அணியானது களமிறங்கியது.

அந்த அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய விருத்திமான் சஹா 2 ரன்னிலும், சுப்மன் கில் 6 ரன்னிலும் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர். அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களில் வெளியேறி விட்டார். இறுதியில் ரஷித் கான் அரைசதம் அடித்தார். கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்ததால் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியானது அபார வெற்றியடைந்தது.