கர்நாடக மாநிலம் சிக்கமகளூர், ஹாசன் சிவமொக்கா போன்ற மாவட்டங்களில் தற்போது மாரடைப்பினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களில் மட்டுமே 27 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு தொடர் உயிரிழப்பிற்கு காரணம் கொரோனா காலத்தில் போடப்பட்ட தடுப்பூசி தான் என்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தர் ராமையா செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது “நெருக்கடியான அவசர காலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்தத் தடுப்பூசியின் தாக்கம் தான் மாரடைத்தினால் ஏற்படும் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம்” என்றும், அதனால் கொரோனா தடுப்பூசி மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.

இவர் பேசியதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து சித்தராமையா பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வந்த் நாராயணன் பேசும்போது, “கொரோனா தடுப்பூசியின் மூலம் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டது. அந்த தடுப்பூசியின் நன்மைகளையும், அறிவியல் ஆதாரங்களையும் பேசாமல் சித்தராமையா இந்த கருத்தை வெளிப்படுத்தியதற்காக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.