சாப்பிடுவதற்கு முன்னால் கையை சோப்பு போட்டு கழுவுவதுதான் நமக்குத் தெரியும். ஆனால், அமெரிக்காவின் மியாமி மற்றும் வாஷிங்டன் டி.சி-யில் உள்ள ‘எல் சியலோ’ (El Cielo) என்ற உயர்தர உணவகத்தில், வாடிக்கையாளர்களின் கைகளில் சூடான உருகிய சாக்லேட்டை ஊற்றி ஒரு வினோதமான சடங்கையே நடத்துகிறார்கள். ‘சாக்லேட் தெரபி’ (Chocotherapy) என்று அழைக்கப்படும் இந்த முறையில், வாடிக்கையாளர்கள் தங்கள் உள்ளங்கையில் ஊற்றப்படும் சாக்லேட்டை தேய்த்து, அதன் சுவையை ருசிக்க வேண்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரால் கைகள் கழுவப்படுகின்றன. இந்த ஒரு நேர உணவிற்கு ஒரு நபருக்கு சுமார் 26,000 ரூபாய் வசூலிக்கப்படுவதுதான் பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.

​மிச்செலின் நட்சத்திரம் பெற்ற இந்த உணவகத்தின் உரிமையாளர் ஜுவான் மானுவேல் பார்ரியன்டோஸ், உணவை வெறும் சுவையாக மட்டுமல்லாமல், ஒரு அனுபவமாக மாற்றவே இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கலவையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “26,000 ரூபாய் கொடுத்து கையில் சாக்லேட்டை ஊற்றி நக்க வேண்டுமா?” என ஒரு தரப்பினர் கிண்டலடித்தாலும், உணவை இப்படி உணர்வுப்பூர்வமாக அணுகுவது ஒரு கலை என மற்றொரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.