
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் செம்பூர் நகரை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (29). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு ஏப்ரல் 4ஆம் தேதி நீதிபதி சுரேஷ் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி வாதிட்டார். அந்த வழக்கில் மாரிமுத்துவின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 8000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஆழ்வார் திருநகரி இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா மற்றும் ஆதாரங்களை திறம்பட சேமித்து விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலைக் காவலர் பூர்ணகலா, குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தந்த அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.