பஞ்சாப் மாநிலத்தில் , ஒரு சினிமா படத்தையே மிஞ்சும் வகையிலான நெஞ்சை உருக்கும் அதேசமயம் தர்மசங்கடமான ஒரு உண்மைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஹன்சா சிங் என்பவர், திடீரென உயிருடன் மீட்கப்பட்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி, அவரது குடும்பத்தினர் 22 ஆண்டுகளுக்கு முன்பே அவரது மனைவி விமலா தேவியை, ஹன்சா சிங்கின் தம்பி சுக் சிங்கிற்குத் திருமணம் செய்து வைத்தனர்.
தற்போது இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், ‘இறந்ததாக’ கருதப்பட்ட முதல் கணவர் ஹன்சா சிங் பிச்சைக்காரர் கோலத்தில் உத்தரப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டு வீடு திரும்பியுள்ளது அந்தத் சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.
உத்தரப் பிரதேச போலீசாரின் விடாமுயற்சியால் அடையாளம் காணப்பட்ட ஹன்சா சிங், தனது பழைய நினைவுகளைக் கூறி குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். இருப்பினும், இந்த நெகிழ்ச்சியான தருணம் விமலா தேவிக்கு ஒரு மிகப்பெரிய வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது.
ஒருபுறம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த முதல் கணவர், மறுபுறம் 22 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கை மற்றும் மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையாக இருக்கும் தற்போதைய கணவர் என விமலா தேவி தவிப்பில் ஆழ்ந்துள்ளார்.
சமூக மற்றும் சட்ட ரீதியாகவும் இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு பெண்ணின் வாழ்க்கை இத்தனை பெரிய சோதனையைச் சந்தித்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
