சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயதான சாய் தேஜா கோபிஷெட்டி என்ற இளைஞர் நிரூபித்துக் காட்டியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஆக்சன் பல்கலைக்கழகத்தில் பிபிஏ முடித்த இவர், படிப்பு முடிந்து வெறும் ஒன்றரை ஆண்டுகளிலேயே ரூ. 20 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட நிறுவனத்தைக் கட்டி எழுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சாய் தேஜா “லுமினாரா லெகஸி பிரைவேட் லிமிடெட் என்ற விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். நவீன விவசாயத்திற்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான உயர்தர விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்களை வழங்கி வருகிறார். வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் தன் நிறுவனத்தின் மதிப்பை ரூ.100 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கோடு இவர் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

இன்றைய காலக்கட்டத்தில் படிப்பு முடித்தவுடன் வேலைக்காகக் காத்திருக்காமல் அல்லது பணிநீக்கம் குறித்த பயத்தில் முடங்காமல், விவசாயத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் தொழிலதிபராக வெற்றி பெற்றுள்ள சாய்தேஜாவிற்கு இணையதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. “சரியான திட்டமிடலும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்” என நெட்டிசன்கள் இவரைப் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

சுய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு உதவ மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கடன் உதவிகளையும் திட்டங்களையும் வழங்கி வருகின்றன. சாய் தேஜாவைப் போல இளம் தலைமுறையினர் இத்தகைய அரசுத் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தி தொழில்துறையில் தடம் பதித்தால், தனிநபர் வளர்ச்சியோடு சேர்ந்து நாட்டின் பொருளாதாரமும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை.