
சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நேற்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ வேலுவின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்த நிலையில் பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தேர்தல் நேரத்தில் நாம் என்னென்ன உறுதிமொழிகளை வாக்குறுதிகளை சொல்லி இருக்கிறோமோ, அவற்றையெல்லாம் படிப்படியாக நாம் நிறைவேற்றி வருகிறோம். மீதமுள்ள வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று நான் உங்களுக்கு உறுதி கொடுக்கிறேன். சிலர் பேசும்போது 234 தொகுதிகளில் 220 தொகுதிகளில் வெல்வோம் என்கிறார்கள். ஏன் கஞ்சத்தனம்.
கண்டிப்பாக 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றால் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. கடந்த 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது அதனை எதிர்த்து முதலில் குரலில் கொடுத்தவர் நம்முடைய கலைஞர் கருணாநிதி தான். அவர் அவசர நிலையை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்ட நிலையில் அடுத்த நொடியே ஆட்சி கலைக்கப்பட்டது.
அதை நினைத்து கவலைப்படவில்லை. இந்த நெருக்கடி நிலைக்குப் பிறகு நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதன் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில் கருணாநிதி தலைமையில் 5 முறை ஆட்சி அமைத்தோம். இதைத்தொடர்ந்து ஆறாவது முறையாக என்னுடைய தலைமையில் நீங்கள் ஆட்சியை உருவாக்கி தந்துள்ளீர்கள். மேலும் 7-வது முறையும் இந்த ஆட்சியை தொடர வைப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.