2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்குப் பிறகு அளித்த ஆதரவிற்கு பிரதமர் மோடி மற்றும் இந்திய ரசிகர்களுக்கு சூர்யகுமார் யாதவ் நன்றி தெரிவித்தார்.

நவம்பர் 19 இந்திய கிரிக்கெட் அணிக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் மிகவும் சோகமான மற்றும் இதயம் உடைந்த நாள். ஆம் 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவின் தோல்வியால் கிரிக்கெட் அணி மட்டுமின்றி ஒவ்வொரு ரசிகரும் நொந்து போனார்கள். இப்போதுவரை அந்த தோல்வியை நினைத்து கவலையடைகின்றனர்.

இதற்கிடையில், ஒரு வீடியோவில், சூர்யகுமார் யாதவ் தனது ரசிகர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உத்வேகம் அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். சூர்யா கூறும்போது, “தோல்விக்குப் பிறகு, நாங்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருந்தோம்​​. நாங்கள் அனைவரும் மனமுடைந்து போனோம், எங்களை வந்து பிரதமர் நரேந்திர மோடி பார்ப்பது பெரிய விஷயம்.  நம் நாட்டின் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்து அனைவரையும் சந்தித்து எங்களுக்கு ஊக்கம் அளித்தார். இது ஒரு விளையாட்டு என்றும் வெற்றி தோல்வியும் அதன் ஒரு பகுதி என்றும் கூறினார். மற்றும் தாழ்வுகள் (தோல்வி) வரும்.. நிச்சயமாக இந்த தோல்விக்கு சிறிது நேரம் எடுக்கும். ஆனால் 5-6 நிமிடம் அவரது ஊக்கமளிக்கும் பேச்சு நிறைய அர்த்தம் தந்தது. ஒரு நாட்டின் தலைவனாக டிரஸ்ஸிங் ரூமிற்கு வந்து ஊக்கப்படுத்துவது என்பது எங்களுக்கு ஒரு பெரிய விஷயம். நாங்கள் அவர் சொன்னதை நன்றாகக் கேட்டோம். அவருடன் நேரத்தை செலவிட்டோம்” என்று கூறினார்.

ரசிகர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு சூர்யகுமார் யாதவ் நன்றி :

தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், “உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி முடிந்து 4-5 நாட்கள் ஆகிவிட்டன, அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம், நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்தியாவிலும் உலகம் முழுவதிலுமிருந்து எங்கள் ரசிகர்கள் காட்டிய ஆதரவைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நாள் முடிவில், இது ஒரு விளையாட்டு, இது எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது. உங்கள் அன்பை எங்கள் மீது பொழிந்து கொண்டே இருங்கள்” என்று கூறினார்.

மேலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் அணி சிறப்பாக செயல்படும் என்று சூர்யகுமார் யாதவ் மேலும் நம்பிக்கை தெரிவித்தார். இந்தப் போட்டியானது கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கூட்டாக நடத்தப்பட உள்ளது. “வரவிருக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். அடுத்த ஆண்டு, மற்றொரு ஐசிசி போட்டி (டி20 உலக கோப்பை) வரவுள்ளது, அதே ஆற்றலுடன் நாங்கள் விளையாடுவோம், அடுத்த ஆண்டு அதை வெல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்தி வருகிறார். முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறும் 2வது டி20 போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறது இளம் இந்திய அணி..