
ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடி, இந்திய ஆசிய கோப்பை அணியில் சூர்யகுமார் அதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து டாம் மூடி கூறியதாவது, ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அதிர்ஷ்டசாலி சூர்யகுமார் யாதவ். அவர் நாம் அனைவரும் பார்க்க விரும்பும் ஒரு வீரர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அவர் இன்னும் 50 ஓவர் ஆட்டத்தில் தன்னை நிரூபிக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் அவர் ஒரு மேதை. ஆனால் 50 ஓவர் கிரிக்கெட் என்பது முற்றிலும் மாறுபட்ட வடிவமாகும், அதில் அவர் இன்றுவரை எந்த சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆசிய கோப்பையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்க முடியாது,” என கூறினார். சூர்யகுமாருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் போன்ற ஒரு வீரரை அல்லது கூடுதலாக ஒரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் இடம் பெற்றிருக்கலாம் என்றும் டாம் மூடி கருத்து தெரிவித்துள்ளார்.
சூர்ய குமார் இதுவரை 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 முறை அரைசதம் அடித்துள்ளார். மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் 3 போட்டிகளிலும் டக் அவுட் ஆகி சாதனை படைத்த வீரர் சூர்ய குமார். ஆனாலும், அந்த வீரரை அணியில் சேர்த்ததற்கு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (து.கே), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முஹம்மது ஷமி, முஹம்மது சிராஜ், பிரஹித் கிருஷ்ணா.சஞ்சு சாம்சன் (காத்திருப்பு வீரர்)