இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த கேப்டனுமான ரோஹித் சர்மாவுக்கும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் கூட்டணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான பிளவு மற்றும் தகவல் தொடர்பு இன்மை தற்சமயம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இடையே ஒரு முக்கிய இணைப்பாக ராகுல் டிராவிட் இருந்தார். டிராவிட்டின் பதவிக்காலத்தில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஆனால், ராகுல் டிராவிட்டின் நிர்வாக பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கௌதம் காம்பீரின் வருகைக்குப் பிறகு, அணியின் சூழல் தலைகீழாக மாறியுள்ளது. இது 2005-ல் இந்திய கிரிக்கெட்டை உலுக்கிய ‘கங்குலி எதிர் சேப்பல்’ வரலாற்றுப் பூசலை மீண்டும் நினைவுபடுத்துவதாக உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐபிஎல் தொடரின் போது வான்கடே மைதானத்தில், “கௌதி பாய், இந்திய அணிக்குத் திரும்பி வாருங்கள்” என ரோஹித் அழைத்த போது, “நீங்கள் கேப்டனாக நீடித்தால் நான் நிச்சயமாக வருவேன்” என கம்பீர் கூறியிருந்தார். ஆனால், சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான 0-3 தோல்விக்குப் பிறகு இவர்களது உறவில் விரிசல் விழுந்தது. கடந்த ஜனவரி 2-ம் தேதி நடந்த பயிற்சி அமர்வின் போது, தனது மோசமான ஃபார்ம் காரணமாகப் போட்டியில் இருந்து விலக ரோஹித் விரும்பியுள்ளார்.
ஆனால், விலகினால் இங்கிலாந்து சுற்றுப்பயணத் தேர்வு பாதிக்கப்படும் என அகர்கர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரே, “நான் இரண்டு குழந்தைகளின் தந்தை, எனக்கு எது சரி என்று எனக்கு நன்றாகத் தெரியும்” என ரோஹித் ஊடகங்களில் அதிரடியாகப் பேசினார். இது அகர்கர் – காம்பீர் ஜோடியை அதிர்ச்சியடைய வைத்தது.
துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்று கொடுத்த வெறும் ஏழே மாதங்களில், ரோஹித் சர்மா 50 ஓவர் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது 5 டெஸ்டிலும் விளையாட ரோஹித் தயாராக இருந்தும், முதல் இரண்டு போட்டிகளுக்குப் பின் முடிவெடுக்கலாம் எனத் தேர்வாளர்கள் பிடிவாதம் பிடித்து, அணியை விட்டு தூக்கிவிடுவதாக மிரட்டியதால் ரோஹித் தனது டெஸ்ட் ஓய்வை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.
தற்போது 2027 ஒருநாள் உலகக்கோப்பையைக் குறிவைத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு நீண்டகால வாய்ப்பளிக்க அகர்கர் மற்றும் கம்பீர் ஜோடி முடிவு செய்துள்ளது. “எங்கள் எதிர்காலத் திட்டத்தில் நீங்கள் இல்லை” என அகர்கர் நேரடியாகத் தெரிவித்ததால் ரோஹித் சர்மா அணிக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
513 சர்வதேசப் போட்டிகளில் 20,289 ரன்களுடன் 50 சதங்கள் அடித்துள்ள ஜாம்பவான் ரோஹித் சர்மாவுக்கு, பிசிசிஐ நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்காததால் அவரது பேட்டிங் ஃபார்மும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் நாடகத்தில் வரும் நாட்களில் மேலும் பல அதிரடித் திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
