மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘VB-G RAM G’ திட்டம் கிராமங்களுக்கும் மாநிலங்களுக்கும் எதிரானது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA), பாஜக அரசு ஒரே நாளில் அழித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரத் தூணைச் சிதைக்கும் முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார்.



மேலும், இந்தத் திட்டம் தலித் மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராகப் பிரதமர் மோடி நடத்தும் நேரடித் தாக்குதல் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். பெயரளவிலான மாற்றத்தைச் செய்துவிட்டு, உண்மையில் நலிந்த பிரிவினருக்கான உரிமைகளைப் பறிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை கிராமப்புற மக்களின் சமூகப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என அவர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.