திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதித்து 20 சவரன் நகை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி.

இவர் கடந்த 16-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்து 20 பவுன் தங்க நகை 14 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார்.

இதுகுறித்து முனுசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் முனுசாமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கீதா என்ற மூதாட்டி இரும்பு கம்பியால் முனுசாமியின் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

திருடிய தங்க நகைகளை வாணியம்பாடியில் இருக்கும் அடகு கடையில் 3 லட்ச ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். இதனால் கீதாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.