பெங்களூருவில் , பையப்பனஹள்ளி பகுதியில் சாலை பணிகளின் போது ஜேசிபி இயந்திரம் ஒன்று தவறுதலாக இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரு பையப்பனஹள்ளி பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் அப்பகுதியில் சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஜேசிபி ஓட்டுநர் தவறுதலாக இயக்கியதால் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமதி மற்றும் பீகாரைச் சேர்ந்த சோனி குமாரி என காவல்துறையினரால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் சோனி குமாரி என்பவர் கடந்த 8 வருடங்களாக பெங்களூருவில் வசித்து வந்ததாகவும், தற்போது 4 மாத கர்ப்பிணி ஆக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  தற்போது காவல்துறையினர் ஜேசிபி ஓட்டுனர் ராஜுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.