தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் மல்லிகாபுரத்தில் துணை ராணுவ வீரரான மாரிசாமி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்தீஸ்கரில் மத்திய ரிசர்வ் படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சசிதாரணி(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய விமல் என்ற மகன் இருக்கிறான். இந்த சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த மாரிசாமி கடமலைகுண்டுவில் இருக்கும் சசிதாரணியின் சகோதரி வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தார். அதன்படி மாரிசாமி தனது மனைவி, மகனுடன் மோட்டார் சைக்கிளில் கடமலைகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் தேனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சீலையாம்பட்டி அருகே சென்ற போது ராயப்பன்பட்டிக்கு ஆட்களை ஏற்றி சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிசாமி, சசிதாரணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை பார்த்து விமல் கதறி அழுதான். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தம்பதியினரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.