திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பூ மார்க்கெட் சந்து பகுதியில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹிதாயத்து நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முகமது உசேன்(13) என்ற மகன் உள்ளான். மூளை வளர்ச்சி குன்றிய முகமதுவுக்கு குடும்பத்தினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். 3 வயதில் சிறுவனுக்கு இரைப்பை தொடர்பான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர், உணவு எதுவாக இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள குழாய் மூலம் தான் சிறுவனுக்கு கொடுக்க முடியும். தங்களது மகனை காப்பாற்றும் எண்ணத்தில் தம்பதியினர் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் செய்து வருகின்றனர்.

தினமும் 3 முறை ஊசிகள், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள குழாய் மூலம் உணவு ஆகியவற்றை தம்பதியினர் சரியாக வழங்கி வருகின்றனர். இந்த சிறுவனை பராமரிக்க ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தம்பதியினர் செலவு செய்கின்றனர். ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்க்கும் பரக்கத்துல்லா வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். தற்போது முகமதுவின் மருத்துவ செல்விற்கு உதவி செய்தால் தாங்கள் வாழும் காலம் வரை எங்களது மகனை பராமரித்து கொள்வோம் என பரக்கத்துல்லா-நிஷா தம்பதியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.