நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் முக்கிய சாலைகளில் நிறுத்தப்படும் கார்களின் கண்ணாடியை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் திருட்டில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் தொட்டபெட்டாவில் இருந்து சேரிங்கிராஸ் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது சில வாலிபர்கள் இருவரையும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுப்பியான் மற்றும் ஆரிப் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, 2 வாலிபர்களும் பெங்களூரில் சாலையோரம் துணி விற்பனை செய்து வந்தனர். அதில் வருமானம் குறைவாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் போல் ஊட்டிற்கு வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். இதனையடுத்து வயதானவர்களின் கார்களை நோட்டமிட்டு கண்ணாடிகளை உடைத்து திருட்டில்  ஈடுபட்டது தெரியவந்தது.