நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கத்திலிருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலையில் பெரியார் நகர் அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. இந்த குடியிருப்பு வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கரடி சாலையில் உலா வந்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதே போல கருஞ்சிறுத்தைகள், காட்டெருமை, முள்ளம்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டமும் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனவிலங்குகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அதனை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.