ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக்கொண்டு பந்து மல்லி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம் சீதனபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதே வழியாக வந்த மற்றொரு கண்டெய்னர் லாரி அதனை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரி மீனவர்களை ஏற்றி வந்த லாரி மீது அதி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஐந்து மீனவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்த ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.